காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேலும் 37 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: குடை கொண்டு வந்தால் மட்டுமே ‘சரக்கு’

காஞ்சிபுரம்: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகத்தின் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில், மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதைதொடர்ந்து தமிழக அரசு, கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதையொட்டி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்ததால், டாஸ்மாக் கடைகளை மூடும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 10ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி, மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டத்தில் ரெட்டிப்பேட்டை தெரு, சாத்தான் குட்டை, செவிலிமேடு கங்கா நகர், கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காட்டில் 3, உத்திரமேரூர் வட்டம் கடல்மங்கலத்தில் 1 என மொத்தம் 16 டாஸ்மாக் கடைள் திறக்கப்பட்டன.

சென்னையை ஒட்டியுள்ள குன்றத்தூர், பெரும்புதூர் ஆகிய வட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. இந்நிலையில் இன்று முதல் பெரும்புதூர் வட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 16 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 கடைகள் திறப்பதன் மூலம் 27 கடைகளாக எண்ணிக்கை கூடுகிறது. இதனால், பெரும்புதூர் வட்டத்தில் புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் கண்டிப்பாக குடை கொண்டு வரவேண்டும் என எஸ்பி அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதேபோல் செங்கல் பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மாமல்ல புரம், மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களில் 26 கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. ஏற்கனவே 11 கடைகள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காலாவதி மதுபானம் விற்பனை

வாலாஜாபாத் அருகே வையாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இங்கு விற்பனை செய்யும் பீர் பாட்டிலில் மே 5 என்ற தேதியும், பிராந்தி பாட்டிலில் கடந்த 2019 நவம்பர் 9 என காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: