விசாகப்பட்டினத்தில் பரபரப்பு இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேற்றம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலை (எச்பிசிஎல்)நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சுத்திகரிப்பு செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  உற்பத்தி பணிகள் குறைந்த அளவில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் உற்பத்தியை பழையபடி செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென நேற்று மதியம் 3 மணி அளவில் தொழிற்சாலையில் இருந்து கடும்புகை வெளியேறியது.

இதனை பார்த்த சுற்று பகுதியில் உள்ள  பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏற்கனவே, விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் நிறுவன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்ததால், கரும்புகையை பார்த்த பொதுமக்களுக்கு பீதி ஏற்பட்டது. இதுகுறித்து பெட்ரோலிய நிர்வாகத்தினர் கூறுகையில், தொழிற்சாலையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவை உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் சி.டி.யூ என்னும் யூனிட்டில் உற்பத்தியை தொடங்குவதற்காக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புகை வெளியேறியது. இது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பணி செய்யாமல் இருந்த நிலையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்டதால் புகை நிறம் மாறி அதிகளவில் வெளியேறியது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றனர். இந்த அறிவிப்புக்கு பிறகு விசாகப்பட்டினம் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: