41 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்: மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது அம்பன் புயல்...இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அம்பன் புயலின் முகப்பு பகுதி கரையை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள அம்பன் புயல், சூப்பர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் வலுவிழந்து கடும் சூறாவளி புயலாக மாறியது. வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் அதி தீவிர புயலான ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் திகா  மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே சந்தர்வன் வனப்பகுதியை ஒட்டி புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

இதனால், மணிக்கு 155 கி.மீட்டர் முதல் 165 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் அதிகப்பட்சமாக 180 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும்  மணிக்கு 185 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும். அப்போது 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அம்பன் புயல் காரணமாக ஒடிசாவின் பாரதி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 102 கி.மீட்டர் வேகத்தில் வீசும் காற்றினால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில்  பறந்தன. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் நீரில் மூழ்கின. இதனைபோல் மேற்கு வங்கத்திலும் கனமழையுடன் காற்று வீசி வருகிறது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் 41 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்தவுடன் மீட்புப்பணியில் ஈடுபட்ட மீட்பு பணி குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், மேற்குவங்கத்தில் 3 லட்சம் பேர்  பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் கிழக்கு மெடினிபூர், தெற்கு மற்றும்  வடக்கு 24 பர்கனாஸ், அவுரா, ஹூக்ளி, மற்றும் கொல்கத்தா மாவட்டங்கள் அம்பனால் பாதிக்கப்படும். கடந்த 2019 நவம்வர் 9ம்  தேதி மேற்கு வங்க கடற்கரையை தாக்கிய புல்புல் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை விட அம்பன் புயல் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Related Stories: