சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்காக 5 மணி நேரம் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்: உணவு கிடைக்காமல் அவதி

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல வடமாநில தொழிலாளர்கள் உணவில்லாமல் பஸ்சுக்காக 5 மணி நேரமாக காத்திருந்து அவதிப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முடங்கி உள்ளது. சாய, சலவை, தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு பகுதிகளில் பல்வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்  சொந்த ஊருக்கு செல்ல கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இருந்து பஸ் மூலம் சேலம் அனுப்பி அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரயிலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இது குறித்த தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், அங்கு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. காலை 9 மணிக்கு பஸ் புறப்பட ஏற்பாடு செய்துள்ளதாக வருவாய்த்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதனால், காலை 8 மணியில் இருந்தே தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வர துவங்கினர். ஆனால், அங்கு வந்தவர்கள் குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. எந்தவித மருத்துவ பரிசோதனைகளும் செய்யவில்லை. காலை 10 மணி ஆகியும் பஸ் புறப்படாத நிலையில் அங்கு காத்திருந்த தொழிலாளர்கள் சோகமடைந்தனர். அவர்களுக்கு உணவு கூட ஏற்பாடு செய்யாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆங்காங்கே மரத்தடியில் உணவின்றி சோகத்துடன் அமர்ந்திருந்தனர். பின்னர், 30 பேர் செல்லும் வகையில் ஒரு பஸ் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜஸ்தான் செல்ல 59 பேர் பதிவு செய்த நிலையில் ஒரு பஸ் மட்டுமே ஏற்பாடு செய்ததால் தங்களுக்கு மற்றொரு பஸ் ஏற்பாடு செய்யும்படி ஈரோடு தாசில்தார் பரிமளாதேவியிடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு வருவாய் அலுவலர்கள் தனியார் கல்லூரியில் இருந்து ஒரு பஸ் ஏற்பாடு செய்தனர். பகல் 12.30 மணிக்கு 59 பேரும் இரு பஸ்களில் சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை 5 மணி நேரமாக காக்க வைக்கப்பட்ட ராஜஸ்தான் தொழிலாளர்களுக்கு உணவு கூட ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் ரயில் சேவை இல்லாததால் அவதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் 18 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு ரயில் நிலையம் மூலம் சிறப்பு ரயில்களில் 2,500 பேரை இரு பிரிவாக பிரித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ரயில் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்தனர்.

ஆனால், இதுவரை ரயில்கள் இயக்கப்படவில்லை. ஈரோட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களை சேலத்திற்கு பஸ்சில் அழைத்து சென்று அங்கிருந்து ரயில்கள் மூலம் அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் உள்ள ஈரோட்டில் ரயில் சேவை இல்லாததால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: