விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும்; தமிழக அரசுக்கு கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதை தமிழக அரசு ஏற்க மறுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விஸ்வநாததாஸ் நகரில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு கனிமொழி எம்.பி அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது; டாஸ்மாக் கடைகளை எப்படி நடத்துவது, வசதிகள் செய்து கொடுத்து இன்னும் எப்படி மக்களை டாஸ்மாக் கடைகளுக்கு வரவைப்பது என்பதில்தான் தமிழக அரசு அக்கறையாக உள்ளது.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பல பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். மாணவர்கள் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வர மற்ற மாநிலங்களில் அதிகளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் ஓரிரு விமானங்களே இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் வரமுடியாத நிலையில் மற்ற மாநிலங்கள் இயக்கும் விமானங்கள் மூலமாக வந்தாலும், அவர்கள் தமிழகத்திற்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் எல்லாம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் தவித்து வரும் தமிழர்களை அழைத்து வருவதற்கான சூழலை உருவாக்க தமிழக அரசு மறுக்கிறது.

கொரோனா அதிகரிக்கும் தருணத்தில் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவதில்தான் அக்கறை இருக்கிறதே தவிர வேறு எந்த விதத்திலும் மக்களைப் பாதுக்காப்பதற்கான அக்கறை இல்லை என்றார்.அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசு கொரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாகக் கொண்டு மாநில உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டுக் கொண்டு இருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்று. இதை எல்லா மாநில அரசுகளும் கண்டிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலைபாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

Related Stories: