வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயில் ரோப்கார் அமைக்கும் பணியில் தொய்வு: பக்தர்கள் வேதனை

வேலூர்: 108 வைணவ தலங்களில் கடிகாசலம் என்று போற்றப்படும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. செங்குத்தான குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயிலுக்கு 1305 படிகளை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். இதனால் வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2001ம் ஆண்டு நன்கொடையாளர்கள் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து கடன் பெற்று ரோப்கார் அமைக்க திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.3 கோடியில் திட்டமிடப்பட்ட இப்பணி பல்ேவறு காரணங்களால் தடைப்பட்டு தற்போதைய நிலையில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. இப்பணியை வடமாநிலத்தை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்ததாகவும், 3 அல்லது 4 மாதங்களில் பணி முடிந்து ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் பிப்ரவரி மாதம் வரை பணி நிறைவடையவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு சூழ்நிலை, கொரோனா பரவலின் தீவிரம் ஆகியவற்றால் நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல் சோளிங்கர் மலைக்கோயிலுக்கான ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் ரோப்கார் அமைக்கும் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதேநேரத்தில் இப்பணியை வடமாநில நிறுவனம் செய்து வருகிறது. இப்பணியில் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஊருக்கு சென்றுள்ளனர். வந்தவுடன் பணி மீண்டும் வேகமெடுத்து முடிந்துவிடும் என்று நம்புகிறோம்’ என்றனர்.

Related Stories: