உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பதால் சீனா மருத்துவ காப்பீட்டில் கொரோனா தொற்று சேர்ப்பு

பீஜிங்: கொரோனா தொற்று நாளடைவில் உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பதால், சீனாவில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா தொற்றும் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போதும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பில் இருந்து லட்சக்கணக்கானோர் குணமடைந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வைரஸ் நாளடைவில் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சீன ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  இது குறித்து சீன தேசிய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 78,277 ஆக உள்ளது.

குணமடைந்து வருவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித ஆபத்தும் இல்லை. அதே நேரம் மிகவும் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு நாளடைவில் நுரையீரல், இதய கோளாறுகள் ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நுரையீரல் பிரச்னையால் மூச்சு விடுதலில் சிர‍ம‍ம், ஆஞ்சினா, அரித்மியா உள்ளிட்ட இதயக் கோளாறுகளால் நீண்ட நாள் நோய் பாதிப்பு  இருக்கவும், மூட்டு மற்றும் தசை செயல்பாடு இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தவிர மன அழுத்தம், தூக்கமின்மை, கால முறையற்ற உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட மனநிலை நோயினால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் நாளடைவில் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சீன மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா தொற்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டு அதற்கான மருத்துவ செலவை மருத்துவ காப்பீட்டின் மூலம் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக‍க்கவசம் தேவையில்லை:

சீன தலைவர் பீஜிங்கில் வெளியே செல்பவர்கள் முக‍க்கவசம் அணிய வேண்டாமென்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பீஜிங் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் வெளியில் செல்லும் போது நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: