அதி தீவிர புயலாகும் ஆம்பன்: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள கூறுவதாவது; நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன்  புயலானது, தெற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 660 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கே சுமார் 650 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என கூறினார்.

புயலின் தீவிரம் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 80-90 கி.மீ வேகத்திற்கு காற்று வீசும். அவ்வப்போது 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி பகுதிகளை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.

வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம் மாவட்டம் வட்டம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: