மேட்டூர் அணையில் நீர்இருப்பு திருப்திகரமாக இருப்பதால் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ல் நீர்திறக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால், டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், அணையில் இருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இரு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி, அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 276வது நாளாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறை யாமல் இருந்தது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 276 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில் குறித்த நாளான ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.07 அடியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 885 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.93 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: