வீடுவீடாக அனுமதி பாஸ் விநியோகம் தர்மபுரி நகரில் வாரம் 2 நாள் மட்டுமே மக்கள் வெளியே வரலாம்: கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வாரம் 2 நாள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படுகிறது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவுதலை தடுக்க பிற ஊராட்சி பகுதிகளில் இருந்து நகராட்சிக்கு வரும் வாகனங்களை நகருக்கு வெளியே நிறுத்தவும், நகராட்சி எல்லையில் 8 இடங்களில் வாகன நிறுத்த இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், நாளை முதல் நகராட்சி பகுதிகளில் 33 வார்டுகளில் உள்ளவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரம் இருமுறை மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு அனுமதி பாஸ் வழங்கப்படுகிறது. இந்த அனுமதி பாஸ் மூலம் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள நபர்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர். வெளியே வருபவர்கள் அனுமதி அட்டையுடன் ஒரு அடையாள அட்டையும் அவசியம் கொண்டு வர வேண்டும். இதன்படி தர்மபுரி நகராட்சியில் 1 முதல் 11வது வார்டு வரை உள்ளவர்களுக்கு இளஞ்சிவப்பு வண்ண அட்டை வழங்கப்படுகிறது. இவர்கள் திங்கள் மற்றும் வியாழன் வெளியே செல்ல அனுமதிக்கப்படும். 12 முதல் 22வது வார்டு வரை உள்ளவர்களுக்கு நீல அட்டை வழங்கப்படுகிறது.

இவர்கள் செவ்வாய், வெள்ளியும், 23 முதல் 33வது வார்டு வரை உள்ளவர்கள் மஞ்சள் வண்ண அட்டை பெற்று புதன், சனி ஆகிய நாட்களிலும் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி நகராட்சி ஊழியர்கள் நேற்று அனைத்து வார்டுகளிலும், வீடு வீடாக சென்று ஒரு குடும்பத்திற்கு ஒரு அனுமதி பாஸ் வீதம் வழங்கினர்.

Related Stories: