பசி, தாகத்துடன் சொந்த ஊருக்கு நடந்து செல்லும் தொழிலாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக 7,500 செலுத்துங்கள்: பிரதமருக்கு ராகுல் வேண்டுகோள்

புதுடெல்லி: வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்புவதை உறுதிப்படுத்தவும், அவர்களின் வங்கி கணக்கில் 7,500 செலுத்தும்படியும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாடு முழுவதுமான ஊரடங்கினால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலையிழந்து, உணவின்றி தவிக்கின்றனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரயில்கள், பஸ்கள்  இயக்கப்படுகிறன்றன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களே, வெளிமாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் நடைபயணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் ஊருக்கு பாதுகாப்பாக திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த இக்கட்டான தருணத்தில், அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக 7,500 செலுத்தும்படி கேட்டு கொள்கிறேன். பிள்ளைகள் காயப்படும் போது தாய்மார்கள் அழுவது வழக்கம். இன்று இந்திய தாய் தனது பிள்ளைகள் பசியுடனும், தாகத்துடனும் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக நடந்து வருவதை பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.  அவர்கள் சொந்த மாநிலம் திரும்புவதை அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்களுடைய வாழ்வதாரத்துக்கு வங்கி கணக்கில் ரூ.7,500 செலுத்துங்கள். அதே போல், சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான பொருளாதார திட்டத்தை செயல்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக ராகுல் தனது இந்த வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: