நூறு நாட்களில் 100/100 வேட்டைக் காடாக மாறும் இந்தியா?

புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் டிசம்பர் மத்தியில் முதன் முதலாக தலைகாட்டிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் 200 நாடுகளை  கொடூரமாக ஆட்டிப்படைத்து வருகிறது. முதலில் சீனா, பிறகு தென் கொரியா, பிறகு அமெரிக்கா என அடுத்தடுத்து சென்ற இந்த வைரஸ், இந்தியாவில் முதன் முதலாக கடந்த ஜனவரி 30ம் தேதி தான் முதலில் நுழைந்தது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்தான் அன்றைய தினத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி. அதன் பிறகு, இந்த வைரஸ் மெதுவாக நாடு முழுவதும் பரவி வருகிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி கட்டுப்பாடுகள், சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மாட்டு வண்டிகள் முதல் விமானங்கள் வரை அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டு விட்டன.

ஆனால், எதற்கும் மசியாமல் இந்த வைரஸ் வாரத்துக்கு வாரம் தனது எண்ணிக்கையை 2 மடங்கு என்ற வகையில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த மாதம் 30ம் தேதியில் இந்த வைரசால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 610 பேர். இறந்தவர்கள் எண்ணிக்கை 1,075 மட்டுமே. 90 நாட்களில் இந்த பாதிப்பு இருந்தது. ஆனால், ேநற்றுடன் முடிந்த கடந்த 12 நாட்களில் இதே எண்ணிக்கையில் நூறு சதவீத பாதிப்பை அது எற்படுத்தி இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆயிரத்து 152 ஆகவும், இறந்தவர்கள் எண்ணிக்கை 2,206 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. இங்கு பாதித்தவர்களும் அதிகம். இறந்தவர்களும் அதிகம்.

முதலில் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில், கொரோனா வந்த சுவடே இல்லாமல் மறைந்து கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து, அதன் தாக்குதலை கட்டுப்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் குஜராத், தமிழகம் போன்றவை இருக்கின்றன.

 இந்தளவுக்கு பாதிப்புகள் அதிகமாக யார் காரணம்? பாதிப்பை பற்றி கவலைப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களா? பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தி, மக்களை திருப்திப்படுத்த முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

அடுத்ததாக, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்கின்றனர். சரக்கு வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் அடைத்தும் செல்லப்படுகின்றனர். இதுபோன்ற அபாயகரமான குறைபாடுகளால் அடுத்து வரும் நாட்களில் கொரோனாவின் வேட்டைக் காடாக இந்தியா மாறும் அபாயம் உள்ளது. அப்போது, அதன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிச் செல்லும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: