கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனைவெல்லம் உற்பத்தி முடங்கியதால் வறுமையின் பிடியில் தொழிலாளர்கள்: கொரோனா ஊரடங்கால் தொடரும் வேதனை

போச்சம்பள்ளி: கொரோனா ஊரடங்கால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை  வெல்லம்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. தமிழர்களின் வாழ்வோடு  பின்னிப்பிணைந்தது பனை மரம். விளைநிலங்களின்  வேலிக்கரையோரம், சாலையோரம், ஆறு மற்றறும் ஏரிக்கரைகளில் பனை மரங்கள் தானாக வளர்வது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மழை பெய்தாலே போதும், அந்த ஈரத்தன்மையின் மூலம் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படுவது பனை மரம். இதனால் கற்பக விருட்சம் என்ற பெருமையும் பனைமரத்திற்கு உண்டு. இப்படிப்பட்ட சிறப்புக்குரிய  பனை மரத்தில் இருந்து பதநீர், நுங்கு, பனங்கிழங்கு என்று ஏராளமான உணவுப்  பொருட்கள் கிடைக்கிறது. பதநீரை காய்ச்சி கருப்பட்டி என்னும்  பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்ற சுவைமிகுந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதே போல் பனை  ஓலைகளில் இருந்து  விசிறிகள், தட்டுகள், தொப்பி என்று மக்கள்  பயன்பாட்டுக்கான பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. அரசு சின்னம் என்ற பெருமைக்குரிய பனைமரம்,  தமிழகத்தில்  லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பனைமரம் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை போச்சம்பள்ளி, திப்பனூர், களர்பதி, மலையாண்டள்ளி, ஆனந்தூர், திருவணப்பட்டி,  மத்தூர், சானிப்பட்டி, கவுண்டனூர், புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பனை மரங்கள்  உள்ளன.  இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான  குடும்பத்தினர்  பனை மரம் சார்ந்த  தொழிலையே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை சீசன்  என்பதால், பனை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அண்டை மாநிலங்களான  பெங்களூரு, பாண்டிசேரி மற்றும் திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட  பகுதிகளுக்கு வேலைக்கு சென்று விடுவார்கள். தற்போது, சீசன்  துவங்கியுள்ளதால் வெளி மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பனை  தொழிலை  மேற்கொள்வதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். வெளி மாநிலம்  மற்றும் மாவட்ட வியாபாரிகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பனை  வெல்லத்தை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். கொரோனா ஊரடங்கால் வெளி மாநில  வியாபாரிகள் வராததால் தொழில் நசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பனைமரம் ஏறுவதையே கை  விட்டுள்ளனர்.  சில தொழிலாளர்கள் மட்டும் மரம் ஏறி பனை வெல்லம்   உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் பல  மடங்கு பனை வெல்லம் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால், இத்தொழிலையே நம்பியுள்ள  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்கள் கடும்  பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பனை தொழிலாளர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை தொழிலை நம்பி ஆயிரக்காண குடும்பத்தினர் உள்ளனர். நாங்கள் ஆண்டு முழுவதும் பாண்டிச்சேரி, திருப்பூர், பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட  பகுதிகளுக்கு குடும்பத்துடன் கூலி வேலைக்கு சென்று விடுவோம். தீபாவளி,  பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே ஊருக்கு வருவோம். அந்த சமயங்களில் சீசனை  எதிர்பார்த்து ஊரிலேயே தங்கியிருந்து குல தொழிலான பனை மரம் ஏறி பனை வெல்லம்  தயாரித்து மொத்தமாக விற்பனை செய்து வருவாய் ஈட்டுவோம். தற்போது, கொரோனா  ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாததால்  வியாபாரிகள் வெல்லத்தை கொள்முதல்  செய்ய வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்படியே பதநீரை இறக்கி  வெல்லம் காய்ச்சினால் போலீசார் ஒரு பக்கம் கள் இறக்குவதாக கூறி மரம்  ஏறும் எங்களை பிடித்துச்சென்று வழக்கு போடுகிறார்கள்.

இதற்கு பயந்து கொண்டும்  பதநீர் இறக்க முடியாமல் தவித்து வருகிறோம். தொழிலுக்கு தேவையான பொருட்களை  கடன் வாங்கி முதலீடு செய்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பால் மிகுந்த  பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம். ஆண்டு தோறும் மிகவும் நலிந்த நிலைக்கு  செல்லும் எங்களைப்போன்ற பனை தொழிலாளர்களை காப்பாற்ற அரசு,  பனை தொழில்  கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க முன் வரவேண்டும். மேலும், தமிழக  அரசு நிவாரண உதவி வழங்கி எங்களைப்போன்ற பனை தொழிலாளர்கள் குடும்பங்களை  காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவி செய்ய வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.

மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை  

பனை வெல்லத்தில் இருந்து இயற்கையாக உருவாகும் கருப்பட்டி மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. பனை  வெல்லம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பனை வெல்லத்தை  நாட்டு மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழக அரசு  பனை தொழிலாளர்கள் நலனை கருத்தில், அதனை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதும் பனைத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: