தர்மபுரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் கேழ்வரகு பயிர்: அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கேழ்வரகு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம், தர்மபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் ஏரியூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கேழ்வரகை ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். தற்போது, கேழ்வரகு அறுவடைக்கு தயாராக உள்ளது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியிடங்களில் தங்கி பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

அதே வேளையில், கூலி வேலைக்கு செல்ல அரசு தளர்வு அளித்துள்ளதால், விவசாய பணிக்கான ஆட்கள் எளிதாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தாராளமாக கிடைக்கும் பகுதிகளில், கேழ்வரகு அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை செய்த கதிர்களை களத்துமேட்டில் பரப்பி வைத்து உலர்த்துகின்றனர். ஆனால், அறுவடை செய்த கேழ்வரகை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசே நேரடியாக கேழ்வரகை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்தல்மலை அடிவாரத்தில் விளைச்சல் அமோகம்

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, வத்தல்மலை அடிவாரம், காரிமங்கலம், பென்னாகரம் பகுதியில் விவசாயிகள் கேழ்வரகு சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். பருவ மழையையொட்டி  அதிகளவில் கேழ்வரகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பருவமழை காலத்தில் தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரம், கொமத்தம்பட்டி, தம்மணம்பட்டி பகுதியில் சாகுபடி செய்த கேழ்வரகு நன்கு கதிர் விட்டுள்ளது. மேலும், அங்குள்ள விவசாய கிணறுகள் மூலம் பயிருக்கு தேவையான நீராதாரமும் கிடைப்பதால் இரட்டிப்பு விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: