2வது நாளில் ரூ.32.45 கோடிக்கு விற்று தமிழகத்தில் முதலிடம்; மது விற்பனையில் மதுரை மீண்டும் ‘டாப்’ கடை மூடியது தெரியாமல் தேடி வந்து ஏமாந்த ‘குடிமகன்கள்’

மதுரை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், திறக்கப்பட்ட 2ம் நாளிலும் மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. மது விற்பனையில், கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மதுரை மதுரை மண்டலம் 2ம் நாளும் முதலிடம் பிடித்தது. ஐகோர்ட் உத்தரவில் முழுமையாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டது தெரியாமலேயே, குடிமகன்கள் ஏராளமானோர் தொடர்ந்து தேடி வந்து, பூட்டிய கடைகளை பார்த்து ஏமாந்து திரும்பினர். மதுரை டாஸ்மாக் மண்டலத்தில் மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் என 10 மாவட்டங்கள் உள்ள.

10 மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கபட்டதும், இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரக்கு விற்பனை அடியோடு முடங்கியது. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், அரசு உத்தரவின்படி, பல்வேறு நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ம் தேதி காலை 10 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் முதல் நாளான 7ம் தேதி மாலை 5 மணி வரை சரக்குகள் அமோக விற்பனையானது.

மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று, சரக்குகளை வாங்கிச் சென்றனர். 7ம் தேதி மதுரை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.8 கோடியே 80 லட்சத்து 7 ஆயிரத்து 875க்கு சரக்குகள் விற்பனையானது. மதுரை மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.45 கோடி சரக்குகள் விற்பனையானது. இதன்மூலம், தமிழக அளவில் மதுரை மண்டலம் மது விற்பனையில் முதலிடம் பிடித்தது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் 8ம் தேதியும் மதுரை மண்டலத்தில் சரக்கு விற்பனை களைகட்டியது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சரக்கை வாங்கிச் சென்றனர். மதுரை புறநகரில் (தெற்கு) ரூ.3 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரத்து 695க்கு விற்பனையானது.

மதுரை நகரிலும் (வடக்கு) ரூ.3 கோடி சரக்கு விற்பனையானது. மதுரை மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 2ம் நாள் (8ம் தேதி) ரூ.32 கோடியே 45 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தமிழகத்திலேயே முதலிடமாகும். மதுரை மண்டலத்திற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.31.17 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.29.09 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.20.01 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.9.28 கோடிக்கு சரக்குகள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மண்டலத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று பூட்டப்பட்டன.

இந்த கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்–்ளது. ஐகோர்ட் உத்தரவில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டது தெரியாமல், குடிமகன்களில் பலர் தொடர்ந்து தேடி வந்து, பூட்டிய கடைகளை பார்த்து ஏமாந்து திரும்பினர்.

Related Stories: