கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு எதிரொலி: எய்ம்ஸ் இயக்குனர் குஜராத் விரைந்தார்

அகமதாபாத்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்பேரில் எய்ம்ஸ் இயக்குனர் குஜராத் விரைந்துள்ளார். நாட்டிலேயே கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. இங்கு 7402 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 390 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 1872 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக குஜராத் மாநிலத்தில் உயிரிழப்புக்கள் அதிகரித்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலின்பேரில் டெல்லி எய்ம்ஸ் இயக்குனரும் நுரையீரல் நிபுணருமான ரன்தீக் குலேரியா மற்றும் மருத்துவர் மனிஷ் சுரேஜா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை குஜராத் புறப்பட்டு சென்றனர். விமானப்படையின் சிறப்பு விமானம் மூலமாக இவர்கள் அகமதாபாத் விரைந்ததாக உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் குலேரியா, அகமதாபாத் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

Related Stories: