கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள் போலீசார் மீது தாக்குதல்: சொந்த ஊருக்கு அனுப்பும்படி போராட்டம்

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட கல்வீச்சில் போலீஸ்காரர் மண்டை உடைந்தது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு அணு உலைகளிலும் மின் உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. அணுமின் நிலைய வளாகத்தில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3, 4 என மேலும் இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் 4,500 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு காரணமாக கட்டுமானப் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாத கடைசியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கின. இதில் 3 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.

 இருப்பினும் தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி கடந்த 4ம் தேதி அணுமின் நிலைய வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து 3,341 பேர் பெயரை பதிவு செய்தனர். இதில் பணியில் இருப்பவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து அந்தந்த ஒப்பந்த நிறுவனம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நேற்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்குவந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் போலீசார் மீதும், காவல் துறை வாகனத்தின் மீதும் வடமாநில தொழிலாளர்கள் கல் வீசி தாக்கினர். இதில் போலீஸ்காரர் சக்திவேல் மண்டை உடைந்தது. அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்துவந்த நெல்லை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிடாவிட்டால் தடியடி நடத்தப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினர். பின்னர், தொழிலாளர்கள், முகாம் இருப்பிடத்திற்கு திரும்பினர். இதனிடையே போராட்டம் நடத்திய வடமாநில தொழிலாளர்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: