மது விற்பனை காரணமாக 50 நாட்களுக்கு பின்னர் விபத்து குற்றச்செயல்கள் தொடங்கியது

நாமக்கல்: தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், கடந்த 50 நாட்களில் முற்றிலும் தடுக்கப்பட்டிருந்த சாலை விபத்துக்கள், குற்றச்செயல்கள் தற்போது அரங்கேறத் தொடங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்றால் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் மூடப்பட்டது.மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வந்தது. அதனால் மேலும் ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டது. சாலையில் பொதுமக்கள் தேவையின்றி சுற்றுவது, கூடுவது உள்ளிட்டவைகள் தடுத்து நிறுத்தப்பட்டது. வீட்டில் தனித்திரு என்று அறிவுறுத்தியதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். மேலும், கொரோனா நோய் பரவிய பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் அடிப்படை தேவைக்கான பொருட்கள் வாங்க மட்டுமே, சில கட்டுப்பாட்டுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விழாக்கள், கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தவும் தடை செய்யப்பட்டது. இந்த தடை சட்டத்தை மீறி ரோட்டில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து, அவர்களை கைது செய்தும், அவர்களின் வாகனங்களை பறிமுதலும் செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரோட்டில் தேவையின்றி சுற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 50 நாட்களாக சாலை விபத்து, கொலை, கொள்ளை, வழிபபறி உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தமிழகம் முழுவதும் 99 சதவீதம் தடுக்கப்பட்டது.கொரோனா நோய் பாதிப்பில் தமிழகத்தில் உயிர்பலி குறைந்த அளவில்தான் உள்ளது. ஆனால் விபத்து, கொலை போன்ற குற்றச்செயல்களால் சராசரியாக ஏற்படும் உயிரிழப்பு பல லட்சம் பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா நோய் மேலும் தமிழக அளவில் அதிகளவு பரவி வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தடை உத்ரவால் முடங்கப்பட்ட பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள தடை உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மது பிரியர்களின் நிலையும் பரிதாபமாகவே இருந்தது. மது பிரியர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மாற்று போதை பொருளை நாடுவது என சென்றதால், அவர்களை போலீசார் தினந்தோறும் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனை அறிந்த தமிழக மதுபிரியர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்குள்ள நோய் தொற்று இங்கு பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அரசு, தமிழகத்தில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கட்டுப்பாட்டுகளுடன் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு தமிழகம் முழுவதும் 70ல் இருந்து 80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மது, நேற்றைய முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 180 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அதாவது இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு காயம் மற்றும் உயிர்பலி எதுவம் நடக்கவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களும் நடக்கவில்லை. இதனால் தமிழக அளவில் இந்த உயிர்பலி மற்றும் குற்றச்செயல்கள் சுமார் 99 சதவீதம் தடுக்கப்பட்டது என்றே கூறலாம். இந்த அமைதி நிலைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், தமிழகத்தில் நேற்றைய முன்தினம் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது, விபத்தில் காயங்கள், கொலை உள்ளிட்ட செயல்கள் ஆங்காங்கே அரங்கேறும் அவல நிலை தொடங்கியுள்ளது. இந்நிலையால் மக்களின் அமைதி வாழ்வு பரிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு, கடந்த 50 நாட்களில் இருந்த அமைதி நிலை மீண்டும் 144 தடை உத்தரவு திரும்ப பெற்ற பின்னரும் தொடர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: