காரை நிறுத்தி ஓடி வந்ததால் விபரீதம்: சர்வதேச கபடி வீர‍ர் போலீசாரால் சுட்டுக்கொலை

கபூர்தலா: பஞ்சாப் மாநிலத்தில் தன்னை தாக்க வருவதாக கருதி உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் சர்வதேச கபடி வீர‍ர் அரவிந்தர்ஜித் சிங் கொல்லப்பட்டார்.

கபூர்தலா மாவட்டத்தில் உள்ள லகான் கே படா கிராமத்தில் தனது நண்பரை விட்டு வருவதற்காக உதவி ஆய்வாளர் பரம்ஜித் சிங் நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார். அப்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதிரே கார் ஒன்று வருவதைக் கவனித்தார். காரை நிறுத்தும்படி அவர் சைகை காட்டினார். காரில் இருந்து சர்வதேச கபடி வீர‍ர் அரவிந்தர்ஜித் சிங், அவரது நண்பர் இறங்கினர். அவர்கள் போலீசாரை நோக்கி ஓடி வந்துள்ளனர்.

இதனால், அவர்கள் தன்னை தாக்க வருவதாக கருதிய உதவி ஆய்வாளர் பரம்ஜித் சிங் தனது துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டார். இதில் கபடி வீர‍ர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் பர்தீப் சிங் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வாகனத்தை நிறுத்தியதற்காக தன்னை தாக்குவார்களோ என்ற குழப்பத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாகவும் முன்விரோதம் எதுவும் இல்லை எனவும் மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: