தொற்று அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா சமூக பரவல் ஆகிறதா?மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரைவில் ஆய்வு

புதுடெல்லி: கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து வைரஸ் சமூக பரவலாகிறதா என்பது குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்பட உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் 56,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,886 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3,390 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொற்று அறிகுறி இல்லாதவரிடம் இருந்து வைரஸ் சமூக பரவலாக பரவுகிறதா என்பது குறித்து விரைவில் சோதனை நடத்தப்பட இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆரின் மூத்த அதிகாரி கூறியதாவது:

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலும் கொரோனா வைரசால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள 75 மாவட்டங்களில் இருக்கும் தொற்று அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து சமூக பரவலாகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.  இந்த மாவட்டங்களில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறப் பகுதிகளில் வசிப்பவர்களிடம் ஏற்கனவே அவர்களது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன், தொற்று அறிகுறி வெளியே தெரியாமல், வைரசை எதிர்த்து போரிடுகிறதா என்பது பற்றி கண்டறியப்பட உள்ளது. இதன் மூலம் கொரோனா சமூக பரலாகிறதா என்பதும் உறுதிப்படுத்தப்பட உள்ளது. அதிகளவு மக்கள்தொகை, அடிக்கடி மக்கள் வந்து செல்லும் முக்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சோதனை சீனாவில் இருந்து சோதனைக்  கருவிகள் வந்த உடன் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சீன கருவிகள் தவறான முடிவுகளை காட்டிய பிரச்சினையால், ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இந்த சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சோதனை எலிசா ஆண்ட்டிபாடி ரத்த பரிசோதனை அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: