புதுச்சேரி பட்டியலில் விழுப்புரம் நோயாளி ஜிப்மர் நிர்வாகம் குறித்து மத்திய அரசிடம் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு புகார்: வெளிமாநில நோயாளிகளை திருப்பி விடுவதற்கு கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களாக ஏற்கனவே 10 பேர் கண்டறியப்பட்டனர். மாகேயில் முதியவர் இறந்த நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே (மாகே-1, புதுச்சேரி-2) சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு ஓரிருநாளில் இறுதிகட்ட பரிசோதனை முடித்து கொரோனா இல்லை என தெரியவந்தால் உடனே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவர் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இதற்கிடையே விழுப்புரத்தை  சேர்ந்த ஒரு பெண் ஜிப்மரில் பல் நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.  சென்னை கோயம்பேட்டில் வேலை செய்த அவரது மகன் ஊர்திரும்பிய நிலையில் அவருக்கு ஜிப்மரில் கொரோனா பரிசோதனை செய்ய வந்தார்.

அறிகுறிகள் ஏதும் இல்லை, சோதனை தேவையில்லை எனக்கூறி ஜிப்மர் நிர்வாகம் அனுப்பி வைத்தது. பின்னர் அந்த நபர் புதுச்சேரி மக்களுக்கான கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறினார். அவரை வெளியே அனுப்பினால், பலருக்கு நோயை பரப்பி விடுவார் என்ற நிலையில், மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்த கடையின் உரிமையாளர்கள், மற்றும் மற்றொருவரும் தாங்களாகவே  புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்தனர். அவர்களையும் சோதனை செய்ததில்  இருவருக்கும் தொற்று உறுதியானது. இந்த விவகாரம் புதுச்சேரியில் விசுவரூபம் எடுத்தது. ஜிப்மரின் இந்த நடவடிக்கை அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. உடனடியாக  இயக்குனரை தொலைபேசியில் அழைத்த முதல்வர், கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களை, அரசு மருத்துவ கல்லூரிக்கு திருப்பி விடும் வேலை செய்ய வேண்டாம் என  கடிந்து கொண்டார். புதுச்சேரி சுகாதாரத்துறை போதுமான தொழில் நுட்ப வசதிகள், ஆட்கள் பற்றாக்குறையுடன் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.

ஆனால் அனைத்து வசதிகளையும், வைத்துக்கொண்டு, இப்படி நடந்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார். ஜிப்மருக்கு வரும் மக்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்து அனுமதித்துக்கொள்ள வேண்டும். மேலும் தற்போது கோயம்பேடு தொடர்புடைய இரண்டு பேரையும், ஆம்புலன்சில் கொண்டு சென்று ஜிப்மரில் வைத்து சிகிச்சையளிக்குமாறு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து 2 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வந்த பண்ருட்டி பெண் உள்பட 3 பேர்,  கோயம்பேடு தொடர்புடைய 2 பேர் என 5 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் 4 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிறமாநில நோயாளிகளுக்கு புதுச்சேரி ஜிப்மரில் மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், கதிர்காமத்தில் அவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் வசிக்கும் நோயாளியை எக்காரணம் கொண்டும் இங்குள்ள பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதே புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: