‘குடிக்காதீர்கள்... கொரோனாவை அழைக்காதீர்கள்’ மது வாங்க வந்த குடிமகன்கள் காலில் விழுந்து வேண்டுகோள்: திருமங்கலம் அருகே திமுகவினர் நூதன பிரசாரம்

திருமங்கலம்:  திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க நின்ற முதியவர்களின் கால்களில் விழுந்து, ‘குடிக்காதீர்கள்... கொரோனாவை அழைக்காதீர்கள்’ என்று திமுக இளைஞரணியினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர்.தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை முதியவர்களுக்கு மது வாங்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் முதியவர்கள் பலரும் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கினர். மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் பகுதி கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக இருப்பதால் நகரில் எங்குமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

 அதே நேரத்தில், திருமங்கலத்தை அடுத்துள்ள தோப்பூரில் டாஸ்மாக் கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த கடையில் முதியவர்கள் வரிசையில் நின்று ‘சரக்கு’ வாங்கி சென்றனர். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விமல், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சுரேஷ் மற்றும் திமுகவினர் இந்த டாஸ்மாக் கடை பகுதிக்கு வந்தனர். வரிசையில் நின்ற முதியவர்கள் கால்களில் விழுந்து, ‘‘குடிக்காதீர்கள்... கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது, மது குடித்து கொரோனாவை வீட்டிற்கு அழைக்காதீர்கள்..’’ என அவர்களிடம் வலியுறுத்தினர். திமுகவை சேர்ந்த இளைஞர்கள் தங்களது கால்களில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த முதியவர்களில் சிலர் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். டாஸ்மாக் கடை முன்பு திமுகவினர் செய்த இந்த நூதன பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: