தமிழக அரசின் மதுக்கடை திறப்பு நடவடிக்கையை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்: சென்னையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நேரத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் 7ம் தேதி(ேநற்று) முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிரம் காட்டியது.

 தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் நேற்று காலை 10 மணியளவில் அவரவர் வீட்டின் முன்பாக கருப்பு சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்தனர். அதன்படி, நேற்று காலை தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உள்பட பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு சின்னம் அணிந்து, தங்களது வீட்டின் முன்பாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது அவர், கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.  துறைமுகம் எம்எல்ஏ அலுவலகம் முன்பு மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். கனிமொழி எம்பி தனது வீட்டு முன்பு கோஷங்களை எழுப்பினார். அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் மற்றும் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூரில் சுந்தர் எம்எல்ஏ, ஆவடியில் நாசர் உள்ளிட்டோர் போராட்டம் செய்தனர்.

இதேபோல் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி முன்னணியினர் வீட்டின் முன்பாக நின்று, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிக் லீக் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், தங்களது வீடு மற்றும் கட்சி அலுவலகங்களின் முன் கருப்பு சின்னம் அணிந்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி.நகர் செயின்ட்மேரீஸ் பள்ளி அருகே உள்ள அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

 * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் கனகராஜ், செல்வா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 இந்த கருப்பு சின்னம் அணிந்த போராட்டம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் சுமார் 5 பேர் மட்டுமே ஒவ்வொரு வீட்டுவாசலின் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களும் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: