பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் கிரிவலப்பாதை வெறிச்சோடியது: கோயில் சிறப்பு வழிபாடுகள் ஆன்லைனில் ஒளிபரப்பு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தடையை மீறி கிரிவலம் செல்வதை தடுக்க, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்ரா பவுர்ணமி உருவான திருத்தலம் என்பதால், சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது கூடுதல் சிறப்பாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.ஆனால், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.01 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்கவும், கண்காணிக்கவும், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் கிரிவலப்பாதை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கிரிவலப்பாதை வழியாக சென்றவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி, திரும்பி அனுப்பினர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் தடைபட்டிருப்பது பக்தர்களை வேதனை அடையச்செய்துள்ளது.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் மட்டும் வழக்கம் போல நடந்தது. ஆனால், தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மேலும், கோயிலில் நடைபெற்ற வழிபாடுகள், பூஜைகள் அனைத்தும் அண்ணாமலையார் கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Related Stories: