உத்திரபிரதேசத்தில் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை, ரூ. 5 லட்சம் வரை அபராதம்..மாநில அரசு புதிய சட்டம்

லக்னோ : கொரோனா தாக்கம் காரணமாக சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என உத்திரபிரதேசத்தில் மாநில அரசு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711-லிருந்து 49,391- ஆக உயர்ந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,161லிருந்து 14,183 -ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,694- ஆக உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மாநில அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றிற்கு அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, மத்திய அரசு அறிவுறுத்தல்களின்படி கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உ.பி தொற்றுநோய் கட்டுப்பாட்டு சட்டம் என்ற புதிய சட்டம் இயற்றப் படுகிறது.

அதன்படி அவர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோல் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களோ, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களோ விதிமீறலில் ஈடுபட்டாலும் அவர்களுக்கும் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம். அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: