கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த தொழிலாளர்கள் லாரி மூலம் மதுரைக்கு தப்ப முயற்சி..: செங்கல்பட்டில் 25 பேர் சிக்கினர்

செங்கல்பட்டு: சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து மதுரைக்கு லாரியில் பயணித்த 25 பேரை செங்கல்பட்டு சோதனை சாவடியில் போலீசார் மடக்கியுள்ளனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது லாரி ஒன்றில் 25 பேர் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோயம்பேடு சந்தையில் முட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி, பழம் வியாபாரம் செய்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரிடமும் தலா ரூ.500 பெற்றுக்கொண்டு லாரியில் மதுரைக்கு அழைத்து செல்வது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகு அவர்களை மதுரைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். கோயம்பேடு சந்தைக்கு வந்து வெளியூர் சென்றவர்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. இந்த நிலையில் 25 பேர் மதுரைக்கு பயணம் செய்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: