1.15 லட்சம் கோடி மூலதன நிதி தேவை பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 4% வரை உயரும்: நிதிப்பற்றாக்குறையும் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயரும். வங்கிகளை பாதுகாக்க மேலும் 1.15 லட்சம் கோடி மூலதன நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை வரலாம்  என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  வராக்கடன் பிரச்னையால் வங்கிகளின் நிதி நிலை மிக மோசமாகி வருகிறது. கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.   இந்த சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் மேலும் அதிகரிக்கும் என பாங்க் ஆப் அமெரிக்காஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் மேலும் கூறியிருப்பதாவது:  கொரோனா பாதிப்பால் வங்கிகளின் வராக்கடன் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய சூழ்நிலைகளின்படி, வராக்கடன் மேலும் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் அதிகரிக்கலாம். எனவே, வங்கிகளை காப்பாற்ற, அவற்றுக்கு மூலதன நிதியாக 700 கோடி டாலர் முதல் 1,500 கோடி டாலர் வரையிலான (சுமார் 53,200 கோடி முதல் 1.15 லட்சம் கோடி வரை) மூலதன நிதியை வங்கிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டி இருக்கும்.

 இதற்காக பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் கை வைக்க வேண்டி வரும்.  வங்கிகளுக்கு மத்திய அரசு மூலதன நிதி வழங்குவதால், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை மேலும் 2 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories: