சோழவந்தான் அருகே சேதமடைந்த சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சுகாதார நிலையம் பழுதடைந்துள்ளதால் உரிய மருத்துவ சேவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ளது முதலைக்குளம். செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட இவ்வூரைச் சுற்றி உள்ள கஸ்பா முதலைக்குளம், எழுவம்பட்டி, பூசாரிபட்டி, கொசவபட்டி, குளத்துப்பட்டி, கீழப்பட்டி, அம்மன் கோவில்பட்டி, ஒத்தவீட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் மருத்துவ வசதிக்காக முதலைக்குளத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு ஒரு கிராம செவிலியர் தங்கி, கர்ப்பிணிப் பெண்களைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கியதுடன், காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இக்கட்டிடம் முற்றிலும் பழுதானதால் இது மூடப்பட்டது. தற்போது கிராம செவிலியர் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் இருந்து மருத்துவம் பார்த்து சென்று விடுகிறார். இதனால் உரிய மருத்துவ வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து முதலைக்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா கூறுகையில்,‘‘ எங்கள் ஊர் சுகாதார நிலையம் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இங்கு தங்கி கிராம செவிலியர் மருத்துவம் பார்ப்பதில்லை. பகலில் அங்கன்வாடி உள்ளிட்ட இடங்களில் இருந்து மருத்துவம் பார்த்துவிட்டு சென்று விடுகிறார். இதனால் இப்பகுதி மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு கூட விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டவும், செவிலியர் இங்கேயே தங்கி முழு நேரமும் சுகாதார நிலையம் செயல்படவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: