சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை; தொழிலாளர்களுக்காக தமிழக காங். சார்பில் முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கப்படும்...ப.சிதம்பரம் டுவிட்

சென்னை: கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர்  செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக ரயில்வே 6 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்களில் நேற்று 3000-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர்.

இதற்கிடையே, இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்  சோனியா காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது தொழிலாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான  பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் நமது அரசாங்கம் போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை செலவு செய்கிறது.

பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் கொடுக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை, இந்த நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது?. எனவே, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும்,  ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்  மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை போல், மற்ற மாநில காங்கிரஸ் சார்பிலும், அம்மாநில முதல்வர்களிடம் நிதி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: