மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 7ம் தேதி கருப்புக் கொடி போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையில் சேர்த்த மத்திய அரசை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் 7-ம் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது. காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு கூட்டம் காணொலி வழியில் நடை பெற்றது. கூட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் ஒருங்கிணைத்தார். சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன்அன்சாரி, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் மணிமொழியன், தமிழ் தேசிய பேரியக்க பொது செயலாளர் வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் பாரதிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மத்திய அமைச்சரவை குழு 27.4.2020 அன்று வெளியிட்ட அரசிதழில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை இந்திய அரசின் ஜல்சக்தி துறையின்கீழ் மாற்றி அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 அன்று அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், தன்னதிகாரமுள்ள தற்சார்பு அமைப்பாகும். அது, மத்திய அரசின் துறைகளுக்கு கட்டுப்பட்டதல்ல. அது முழுநேர தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் தனி அலுவலகத்தில் செயல்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தனி அதிகாரிகள் அமர்த்தாமல், நடுவண்நீர் ஆணைய தலைவரின் கூடுதல் பணியாக சுருக்கி விட்டது.

இந்த அதிகார பறிப்பை நிரந்தரப்படுத்தவும், விதிமுறைகளுக்கு உட்படுத்தவும் மோடி அரசு சூழ்ச்சியாக மேற்கண்ட அலுவலக பணி விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இவற்றுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். அதன்படி, வரும் 7ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 5.30 மணிக்குள் கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், அனைத்து மக்களும் அவரவர் வீட்டு வாசலில் சமூக இடைவெளிவிட்டு கையில் கண்டனம் மற்றும் கோரிக்கை பதாகைகள், கருப்பு கொடிகளையும் ஏந்தி, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: