கொரோனா உண்டாக்கிய வறுமை கொடுமையால் டீ குடிப்பதை கூட மறந்து விட்டோம் : பேரையூர் கணபதிகாலனி மக்கள் புலம்பல்

பேரையூர்: கொரோனா ஊரடங்கால் பேரையூர் கணபதிகாலனி மக்கள் டீ குடிக்க கூட குடிக்க முடியாமல் வறுமையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். பேரையூர் மண்மலை அடிவாரத்தில் உள்ள கணபதிகாலனியில் டொம்பர் இன மக்கள் 60க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக 50 கிலோ அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதை 20 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்ததில் 2 நாட்களுக்கு மட்டுமே உணவு கிடைத்துள்ளது. பின்னர் அரசு வழங்கிய ரூ.1000 பணம், ரேஷன் அரிசியும் அடுத்த 15 நாட்களில் தீர்ந்து போய்விட்டது. இதனால் பேரையூர் மக்களிடம் ஒரு கிலோ ரேஷன் அரிசியை ரூ.5க்கு விலைக்கு வாங்கி சமைத்து வருகின்றனர். வேலையின்றி வருமானம் ஏதும் இல்லாததால் தற்போது அதை வாங்கவும் பணம் இல்லாமல் பட்டினியால் வாடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.இதுகுறித்து கணபதிகாலனியை சேர்ந்த சாந்தி கூறுகையில், ‘வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாத நிலையில் அனைவரும் இருக்கிற அரிசியைத்தான் சமைத்து சாப்பிட முடியும். ஒருநாளைக்கு 3 வேளை உணவு குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருமே சாப்பிடும் போது 20கிலோ அரிசி 15 தினங்களிலேயே தீர்ந்து போய்விடுகிறது. அதற்கு அடுத்தநாள் உணவிற்கு என்ன பன்னுவது’ என்றார்.

சத்யா கூறுகையில், ‘எந்த வேலை, வெட்டியும் இல்லாமல் இருக்கும் போது, வீட்டில் எந்த வருமானம் வர போகிறது, டீ சாப்பிட வேண்டுமென்றால் பால், சீனி வாங்குவதற்கு பணம் வேண்டுமே. இதனால் டீ குடிக்கிறதை கூட மறந்து போய்விட்டோம். இப்போது பிள்ளைகள் அனைவருமே உணவின்றி தவிப்பதை வெளியே சொல்லமுடியாத துன்பத்தில் தவித்து வருகிறோம்’ என்றார். மகாலிங்கம் கூறுகையில், ‘பேப்பர், பிளாஸ்டிக் டப்பா, பாட்டில்கள் பொறுக்கித்தான் பொழப்பு நடத்தி வந்தோம். இப்போ அந்த பொழப்பும் போச்சு. எங்கு பார்த்தாலும் அரிசி, மளிகைசாமான், உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வெறும் ரேசன் அரிசி மட்டும் கொடுத்தால் கூட போதும் குழந்தைகளோடு தண்ணீர் கஞ்சியாக சமைத்து சாப்பிட்டு கொள்வோம்’ என்றார். எனனே கணபதிகாலனி மக்களின் உண்மை நிலையை அறிந்து அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: