வங்கி கடன் தவணைக்கு 3 மாத அவகாசம் ஆணையை வங்கிகள் அமல்படுத்துவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  கொரோனா பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27ல் புதிய சலுகை ஒன்றை அறிவித்தது. அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் கடந்த மார்ச் முதல் மே வரையில் 3 மாதம் தவணையை காலம் தாழ்த்தி செலுத்தலாம் என தெரிவித்தது. ஆனால் கடன்பெற்றவர்கள் பயன் அடைய வகை செய்யும் இந்த ஆணையை வங்கிகள் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டியும் இந்த ஆணையை தீவிரமாக செயல்படுத்த கோரியும் 4 பேர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஒருவர் சார்பில் சாஜூ ஜேக்கப் என்ற வக்கீல் நேற்று ஆஜர் ஆனார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ரமணா அமர்வு முன் வந்தது. அப்போது மனுதாரர் எவ்வளவு கடன் பெற்றுள்ளார் என நீதிபதிகள் கேட்டபோது, `‘மனுதாரர் எந்த கடனும் பெறவில்லை பொதுநல நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’ என வக்கீல் ஜேக்கப் பதிலளித்தார். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், நீதிபதிகள் ரிசர்வ் வங்கி வழங்கிய பலனை கடன்தாரர்கள் பெறவில்லை என தெரிகிறது. எனவே கடந்த மார்ச் 27ல் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை வங்கிகள் தீவிரமாக அமல்படுத்துவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்யவேண்டும். இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: