கொச்சி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் சமூக இடைவெளி பின்பற்ற வசதியாக, கேரள உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு குடைகள் வழங்கி அசத்துகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தனீர்முக்கோம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம், சமூக இடைவெளியை கடைபிடிக்க, குடையை பயன்படுத்துங்கள் என்று புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் குடையை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்த தொடங்கியுள்ளனர்.
‘பிரேக் தி செயின்’ குடை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகள், தங்களது பகுதி குடியிருப்பாளர்களுக்கு குறைந்தது 10,000 குடைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளன. மேலும், குடைகள் மானிய விலையில் விநியோகிக்கப்படும் என்றும் அம்மாநில நிதியமைச்சர் ஐசக் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அறிவிக்கப்பட்டுள்ள மூன்று ஹாட்ஸ்பாட்களில் தானீர்முக்கோம் பகுதியும் ஒன்றாகும். தற்போது கோட்டயத்தைச் சேர்ந்த சட்டண்ணுராண்ட் மற்றும் சாஸ்தம்கோட்டா மற்றும் மனர்காட் ஆகிய பகுதிகளும் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக உள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
சமூக இடைவெளியை செயல்படுத்த மக்கள் மற்றும் அமைப்புகள் தனித்துவமான வழிகளைக் கண்டுபிடித்துள்ள நிலையில், பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் (பிபிபி) பணியாற்றும் ஊழியர்களும் குடைகளை பயன்படுத்தி பணியாற்றுகின்றனர். மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள், உயிரியலாளர்கள் போன்றோர் சமூக இடைவெளியை பராமரிக்க குடையை பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பிபிபி நிர்வாக இயக்குனர் வனாஷ்ரி விபின் சிங் கூறுகையில், ‘மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களிடம் இந்த குடைகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்த விரும்புவோர் ரூ.500 டெபாசிட் செய்து அதைப் பயன்படுத்திய பின்னர் திருப்பித் தரலாம். இப்போது, இடைவெளியை பராமரிக்க குடைகளை பயன்படுத்தி வருகிறோம். பார்வையாளர்களுக்காக பூங்காவை திறந்தவுடன், அவர்களுக்கு குடையை கொடுப்போம். உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடை. இது மற்ற பார்வையாளர்களிடமிருந்து தூரத்தை பராமரிக்க அவர்களுக்கு உதவும். சமூக இடைவெளி பின்பற்ற வசதியாக பூங்கா திறந்தவுடன் அவற்றை இலவசமாக வழங்குவோம்” என்றார்.