தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்: சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்...மருத்துவ நிபுணர் குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும், மக்கள் மொத்தமாக ஓரிடத்தில் கூடுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள சூழலில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.  

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்த பிரதீப் கவுர் கூறியதாவது; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தபட்டுள்ளது.

இதனால் அதிக பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. இந்த பாதிப்பு தமிழகம் முழுவதும் இல்லை, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஒரே மாதிரியாக இல்லை. தமிழகத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும். பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்வு குறித்து அரசு முடிவு செய்யும். சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த ஆலோசனை வழங்கியுள்ளோம். ஊரடங்கைத் தளர்த்தினாலும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மொத்தமாக நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.

கொரோனா தொற்று நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்கும். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, தனிமனித இடைவெளி அவசியம். முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். முக்கியமாக மக்கள் மொத்தமாக கூடும் விதமாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. பரிசோதனையை அதிகரித்தால் நாம் அதிகளவில் கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிய முடியும். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது .

Related Stories: