கொரோனா ஊரடங்கால் விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பாதிப்பு: ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

விருதுநகர் : கொரோனா ஊரடங்கில் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய நையாண்டி கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தினசரி சாப்பாட்டிற்கே சிரமப்படுகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டு மே 3ம் தேதி வரை விதிக்கப்பட்ட ஊரடங்கு முடிவிற்கு வருமா, வராதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அனலாய் தகித்து வருகிறது. கொரோனா ஊரடங்கில் மக்கள் அதிகம் கூடும் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், விசேஷ நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த தடையால் மேளம், நாதஸ்வர, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, குறவன், குறத்தி ஆட்டாம், தரையாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வேலையிழந்துள்ளனர்.

பங்குனி, சித்திரை கோவில் திருவிழாக்கள் களைகட்டும் போதும், திருமண நிகழ்ச்சிகளிலும் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கை சோகமாகி இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும் வரை இவர்களின் தினசரி வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.இதுகுறித்து கிராமிய நையாண்டி கலைஞர்கள் சங்க உதவி தலைவர் பிலாவாடி கருப்பையா கூறுகையில்,`` விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நேரத்தில் கொரோனா பரவியதால் விதிக்கப்பட்ட தடையால் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையில் சிரமப்படுகின்றோம். அரசு சார்பில் கிராமிய நையாண்டி கலைஞர்களுக்கு நிலமை சீராகும் வரை அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ‘’என்றார்.கிராமிய கலைஞர் கணேசன் கூறுகையில், ``ஊரடங்கால் வேலையின்றி கிராமிய கலைஞர்கள் சிரமப்படுகிறோம். அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: