உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு உழைக்கும் மக்களை உலகம் பறைசாற்றும்; முதல்வர் பழனிசாமி மே தின வாழ்த்து

சென்னை: நாளை மே தினம் கொண்டாடபடவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 18 -ம் நூற்றாண்டின் இறுதியில், வளரும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களை 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்தித்தனர். பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நெசவாளர்கள், விவசாய கூலிகள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் கால நேரம் பார்க்காமல், செக்கு மாடுகளைப் போன்று உழைத்தனர். இதை எதிர்த்து பல நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றின. பல இடங்களில் போராட்டமும் நடந்து வந்தன. 1886-ல் அமெரிக்காவில், தொழிலாளர் கூட்டமைப்பு நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதன் காரணமாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. முதலாளித்துவத்துக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த சூழலில் சிகாகோவில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்துக்காக கூட்டத்தை திரட்டியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. எட்டு மணி நேர வேலை,ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் நிறைவேறிய அந்த தினத்தை தொழிலாளர்கள் தினம் அல்லது மே தினம் என்றழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை போராடி பெற்ற தினத்தை மே-1 உலக நாடுகள் பலவும் இன்றும் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு மே தின வாழத்துகளை தெரிவித்துகொள்கிறேன். விவேகானந்தனின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் தொழிலாளர்கள் உயர்த்துகின்றனர். உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு உழைக்கும் மக்களை உலகம் பறைசாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: