ஆரணி இரும்பேடு தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்து அலைமோதிய பொதுமக்கள்

ஆரணி: கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஆரணியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கடந்த 14ம் தேதி முதல் காய்கறி கடைகள், பழக்கடை, மளிகைக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், ஆரணி மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் இரும்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்ய அனுமதிக்காமல், காய்கறிகளை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, வாகனங்களில் வாங்கிக்கொண்டு கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரமும் செய்யப்படுவதால், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க குவிகின்றனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாங்கி செல்கின்றனர். இதனால் அதிகளவில் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரணி காய்கறி மார்க்கெட், கோட்டை மைதானத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தான் ஆரணி அடுத்த இரும்பேடு பகுதிக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது.

ஆனால், தற்போது அங்கேயும் சமூக இடைவெளியை மறந்து பழைய நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சேர்கின்றனர். இதனால் நோய்த்தொற்று அதிகளவில் பரவும் என்பது தெரிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும்காணாமல் இருந்து வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள்  நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆரணியில் இதுகுறித்த அச்சமின்றி பொதுமக்கள் அலைமோதுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் சேறும் சகதியுமான மார்க்கெட்

ஆரணியில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்ததால், இரும்பேடு காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள் பொருட்களை பாதுகாக்க முடியாமல் மழையிலேயே நின்றபடியே விற்பனை செய்தனர். தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமானதால் சுகாதாரமற்ற நிலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரும் பொருட்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், மழையாலும், வெயிலாலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் மார்க்கெட்டில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: