ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீவிபத்து: 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பற்றிய தீயை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் உள்ளது சஞ்சீவி மலை. கடந்த 10 நாட்களாக கொளுத்தி வரும் கடும் வெயிலின் காரணமாக மலைச்சரிவில் வளர்ந்துள்ள கோரைப்புல் உள்ளிட்ட முட்புதர்கள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் சஞ்சீவி மலையில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து அதிகரித்த காற்றினால் தீ மலை உச்சிக்கு பரவ தொடங்கியது. தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான 10 வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் வனத்துறையினரும் சேர்ந்து கொண்டனர். செங்குத்தான பகுதியாக இருந்ததால் தீ எரிந்த இடங்களை உடனடியாக நெருங்க முடியவில்லை. 5 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் முட்புதர்கள் எரிந்து போயின. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘விளையாட்டு போக்கில் சிலர் வைக்கும் தீ பரவியதில், தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம். அதுபற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: