வாகனங்களுக்கு ‘க்யூ ஆர் கோட்’ பாஸ் கட்டாயம் என்று அறிவிப்பு மதுரை கலெக்டர் ஆபீசை 3 ஆயிரம் பேர் முற்றுகை: ‘காற்றில் பறந்தது’ சமூக இடைவெளி

மதுரை: மதுரையில் வாகனங்களுக்கு, ‘க்யூ ஆர் கோட் பாஸ்’ கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் திடீரென அறிவித்ததால், பாஸ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை நேற்று 3 ஆயிரம் பேர் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகத்திலேயே சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில், மருத்துவம், துக்கம், திருமணம் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கும், வணிகர்களுக்கும், சிறுவியாபாரிகளுக்கும் வருவாய்த்துறை சார்பில் வாகன பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சில நாட்களாக ஊரடங்கு உத்தரவை மீறி பலர் டூவீலர்கள், கார்களில் செல்வதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதனால், இன்று (சனிக்கிழமை) முதல்  டூவீலர்கள், கார்களில் செல்பவர்கள் ‘க்யூ ஆர் கோட் பாஸ்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதைடுத்து, ‘க்யூ ஆர் கோட் பாஸ்’ கேட்டு, வணிகர்கள், தூய்மைப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 3 ஆயிரம் பேர் காலை 7 மணியில் இருந்தே மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், ‘யாருக்கும் பாஸ் வழங்கமாட்டோம்’ என தெரிவித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால்,  தங்களுக்கு ‘க்யூ ஆர் கோட் பாஸ்’ கேட்டு மக்கள் கோஷங்களை எழுப்பினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார், கலெக்டர் அலுவலக வாசல் கேட்டை மூடினர். அப்போது, மேலும் ஆயிரக்கணக்கானோர் மெயின் ரோடு வரை திரண்டு நின்றனர். எந்த சமூக இடைவெளியும் பேணாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே வளாகத்தில் திரண்டதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை தொடர்ந்து, புதிய அறிவிப்பை ரத்து செய்து. பழைய நடைமுறையே அமலில் இருக்கும் என அதிகாரிகளை அழைத்து தெரிவிக்கும்படி, கலெக்டர் வினய் அறிவுறுத்தினார்.

இதன்பிறகு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர் மற்றும் தாசில்தார்கள், பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து, ‘‘ஏற்கனவே கொடுத்த பாஸ் செல்லும். புதிய நடைமுறை இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள்’’ என மைக் மூலம் கூறினர். இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: