தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக 2 கி.மீ., நீளத்துடன் அனகோண்டா ரயில்: ஈரோட்டில் இருந்து ரேணிகுண்டா சென்றது

சேலம்: தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக 2 கி.மீ., நீளம் கொண்ட அனகோண்டா ரயில் ஈரோட்டில் இருந்து ரேணிகுண்டா வரை இயக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை (வேகன்) ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரே ரயிலாக இணைத்து இயக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் ரயிலை அனகோண்டா ரயில் என அழைப்பார்கள். காரணம், ஒரே நேரத்தில் ஓரிடத்தில் 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகள் சேர்க்கப்படுவது அரிதாகும். இதற்கு முன் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில், இம்மாதிரி 3 சரக்கு ரயில்களின் காலி பெட்டிகளை இணைத்து அனகோண்டா ரயிலாக இயக்கியுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் நேற்று முதன் முறையாக சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோட்டில் இருந்து தென் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ரேணிகுண்டாவிற்கு அனகோண்டா ரயில் இயக்கப்பட்டது. ஈரோடு ரயில்வே யார்டில் இருந்து ரேணிகுண்டாவிற்கு 3 சரக்கு ரயில்களின் வேகன்கள் செல்ல இருந்தது. இதனை ஒரே ரயிலாக இணைத்தனர். இதன்படி 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு 126 பெட்டிகள் (வேகன்கள்) இணைக்கப்பட்டு, காலை 6.30 மணிக்கு தனது இயக்கத்தை தொடங்கியது. இந்த அனகோண்டா ரயில், சேலம், ஜோலார்பேட்டை வழியே மாலையில் ரேணிகுண்டாவிற்கு சென்றடைந்தது. அங்கு, 3 சரக்கு ரயில்களும் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டது.

Related Stories: