சின்னமனூர் அருகே மலைக்கிராமத்தில் யானைகள் முகாம்: பொதுமக்கள் பீதி

சின்னமனுர்: சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் யானைகள் கூட்டமாக முகாமிட்டிருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேருராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியார், மகராஜன் மெட்டு, இவங்கலாறு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஏக்கரில் தேயிலை, ஏலம், காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மேகமலை வனஉயிரின சரணாலயத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைக் கூட்டங்கள் அதிகமாக உள்ளன.

இவைகள் தாகம் எடுக்கும்போது தேயிலை தோட்டப்பகுதிக்கு இறங்கி வந்து, மலைக்கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மணலாறு, வெண்ணியாறு, மேல் மணலாறு, மகராஜன் மெட்டு, இரவங்லாறு கிராமங்களில் யானைகள் முற்றுகையிடுவதால், மலை கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, சின்னமனூர் வனத்துறையினர் மலைக்கிராமங்களுக்கு வரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டி யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: