கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல் விலையை குறைக்க திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவால் அமெரிக்க சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கு சரிந்தது. உலகச் சந்தையில் ஒரு பேரல் 15 டாலர் என்ற விலையில் கச்சா எண்ணெய் இப்போது விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பதற்குக் காரணம் மோடி அரசின் வரி விதிப்புக் கொள்கைதான். இதன் காரணமாகத்தான் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலன் இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களை மத்திய பாஜக அரசு வழிப்பறி செய்கிறது.

அப்படி வரிவிதித்து சேர்த்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்களை ரத்துசெய்வதற்குப் பயன்படுத்துகிறது. தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையாக சரிந்துள்ள நிலையில், வழக்கம்போல  மக்கள் உழைப்பைச் சுரண்டுவதற்கு முயற்சிக்காமல், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் துணைபோகாமல், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்,  பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைப் பாதியாகக் குறைத்திட வேண்டும்.

Related Stories: