குடியரசுத்தலைவர் மாளிகையையும் விட்டு வைக்காத கொரோனா; ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி...அதிகாரிகள் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

டெல்லி: குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 590 பேர் உயிரிழந்த நிலையில், 3252 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: