அத்தியாவசியமற்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை தொடர்கிறது: அனுமதி அளித்த சில நாட்களில் வாபஸ்

புதுடெல்லி: டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆடைகளை ஆன்லைனில் விற்க சில நாட்கள் முன்பு அனுமதி அளித்த மத்திய அரசு, நேற்று அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.  கொரோனா ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுதவிர, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் ஆன்லைன் நிறுவனங்கள், ஊரடங்கிற்கு முன்பு ஆர்டர் செய்தவற்றையும் டெலிவரி செய்யாமல் நிறுத்தி வைத்தனர்.

 ஊரடங்கு விதிகள் வரும் 20ம் தேதியில் இருந்து தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில், கடந்த 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், ஆன்லைன் நிறுவனங்கள், வரும் 20ம் தேதி முதல் பொருட்களை விற்பனை செய்ய விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும், மொபைல் போன்கள், டிவி, பிரிட்ஜ், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், ரெடிமேட் ஆடைகள், பள்ளி குழந்தைகளுக்கான எழுது பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று மேற்கண்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்றவர்களுக்கு தடை தொடரும் என உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: