ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவு?: அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 20ம் தேதிக்கு (நாளை) பிறகு ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் கடைகள்,  நெடுஞ்சாலை ஓட்டல்கள்,

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி, 50 சதவீத ஊழியர்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள், கொரியர்  சேவைகள் நடைபெறலாம் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோன்று, ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றாலும்,  ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் நாளை (20ம் தேதி) முதல் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம், எந்தெந்த பணிகளுக்கு தளர்வு? என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர்  கிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவினர், நேற்று முன்தினம் மாலை சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஊரடங்கு  தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: