கொரோனா பாதிக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியா மருந்து ஏற்றுமதி செய்கிறது; பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது: இந்திய ராணுவ தளபதி

டெல்லி: காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் கடந்த சில தினங்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், காஷ்மீரில் உள்ள நிலமை குறித்து ஆய்வு செய்ய இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் உள்ள 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே அளித்த பேட்டியில் கூறியதாவது;  இந்தியாவும் உலகின் பிற பகுதிகளும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேரத்தில் பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா மருந்துகளை அனுப்பி உலகுக்கே உதவியாக உள்ளது.ஆனால் இன்னொரு பக்கம் பாகிஸ்தான், பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி  தோல்வியடைந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தீவிர ஆதரவு இல்லாமல் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் சாத்தியமில்லை. ஒட்டு மொத்த உலகமே ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, ​​நம் அண்டை நாடு தொடர்ந்து நமக்குத் தொல்லைகளைத் தூண்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் இந்திய ராணுவத்தில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே தெரிவித்தார்.

Related Stories: