திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா துவாரம் கதவில் இரும்பு வேலிகள் அமைப்பு: காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க ஏற்பாடு

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க மகாதுவாரம் கதவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுவாமிக்கு நடைபெறக்கூடிய அனைத்து பூஜைகளும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று நடத்தி வருகின்றனர். இதனால், கோயிலில் சில ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 8.30 மணிக்கு கோயில் நடை சாத்தியதும் திருமலை முழுவதும் அமைதியான சூழல் காணப்படுவதால் வனவிலங்குகள் தொடர்ந்து வெளியே வந்த படி உள்ளது.

இதில், குறிப்பாக காட்டுப்பன்றிகள், நாய் உள்ளிட்ட விலங்குகள் நான்கு மாடவீதிகளில் அவ்வப்போது சுற்றி வருகிறது. காட்டுப்பன்றிகள் கோயிலின் மகா துவாரம் என்றழைக்கப்படும் ராஜகோபுரம் உள்ள இடத்தில் தற்போது உள்ள பித்தளை கதவுகள் வழியாக உள்ளே சென்று விடாமல் இருப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் இரும்பு வேலிகளை அமைத்து உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் விலங்குகள் உள்ளே வராமல் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பக்தர்கள் தங்கும் விடுதி அருகே கரடி நடமாட்டம்: திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதேபோல் புள்ளிமான்கள் துள்ளி விளையாடும் காட்சிகளும், யானைகள் சுற்றித்திரியும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திருமலை அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ள பகுதியில் தினமும் இரவு நேரத்தில் கரடிகள் வந்து செல்கிறதாம். இதனை அங்கு பணியில் இருந்த தேவஸ்தான சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். மேலும், பகலிலேயே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மலைப்பாதை, வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: