சோர்வுக்கு டீ குடிக்க போன போலீஸ் அதிர்ச்சி: கேனுல டீ பிடிச்சா..... சாராயம் வருது..... திருச்சியில் தப்பிய பெண்ணுக்கு வலை

திருச்சி: திருச்சியில் டீ கேனில் கள்ளச்சாராயம் விற்ற ராம்ஜிநகர் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மே 3ம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் 21 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குடிமகன்கள் ரூ300 முதல் ரூ500 வரை (குவார்ட்டர்) கொடுத்து பிளாக்கில் விற்கப்படும் மதுவை வாங்கி குடித்து வருகின்றனர். இதற்கிடையில் சரக்கு அதிக விலை என்பதால் மாற்றாக குடிமகன்களுக்காக கள்ள சாராயம் காய்ச்சும் பணி தற்போது துவங்கியுள்ளது.

இதில் ராம்ஜிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. ஆனாலும் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்பட்டு நூதன முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நூதனமாக டீ கேனில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ராம்ஜிநகர் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் டீ கேனில் டீ விற்று கொண்டிருந்தார். அதனை பார்த்த போலீசார் கேனை பறிமுதல் செய்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு வரக்கூறி சென்றனர். ஆனால் அந்த பெண் காவல் நிலையம் செல்லவில்லை.

காவல்நிலையம் சென்ற போலீசார் வெகுநேரமாக அந்த பெண் வராததை அடுத்து சோர்ந்து போனதாலும், டீ கிடைக்காததால் பறிமுதல் செய்த கேனில் இருந்த டீயை குடிக்கலாம் என பிடித்து பார்த்த போது டீக்கு பதில் கள்ளச்சாராயம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். டீ கேனில் டீக்கு பதிலாக கள்ளச்சாராயம் விற்ற அந்த பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: