உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடக்குமா?: கட்டுப்பாடுகளுடன் நடத்த பக்தர்கள் வேண்டுகோள்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு, உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை தகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும், சித்திரை மாதம் துவங்கி 18 நாட்கள் விசேஷமாக நடைபெறும். மதுரை மீனாட்சி கோயில், அழகர்கோயில் திருவிழாக்களை இணைத்து சைவ, வைணவ ஒற்றுமைக்குரியதாக திருமலை மன்னர் இவ்விழாவை மாற்றித் தந்தார். நடப்பாண்டில், இந்த அற்புதத் திருவிழாவிற்கு மீனாட்சி கோயிலில் ஏப்.25ல் கொடி ஏற்றம் நடைபெற வேண்டும்.மே 4 - மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மே 5 - தேரோட்டம், மே 6 - கள்ளழகர் எதிர்சேவை, மே 7 - வைகை ஆற்றில் இறங்குதல் போன்ற முக்கிய உற்சவங்கள் நடைபெறும். இந்நாட்களில் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் மதுரையில் குவியும் பக்தர்களால் நகரமே குலுங்கிப் போகும்.

கள்ளழகருக்கு எதிர் சேவை செய்கிற ஆயிரக்கணக்கான பக்தர்கள் 40 நாட்கள் விரதமிருந்து, கள்ளழகர் வேடமிட்டு வருவர். மே 7ல் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவ தினத்தில், பத்து லட்சம் மக்களை ஒரே இடத்தில் குவியச் செய்கிற குதூகலப் பெருவிழாவாகவும் இத்திருவிழா இருக்கிறது.ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு, தற்போது மே 3ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியே கொரோனா தொற்று தடுப்புக்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதி, தற்போது கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மே 3க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அப்படியே மூடிக்கிடக்கும் கோயில்களை திறந்தாலும், திருவிழாக்களை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊரடங்கு நிறைவு நாளான மே 3ம் தேதிதான் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவின் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. அங்கிருந்து 5ம் தேதி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படும் நிகழ்வு, 6ம் தேதி எதிர்சேவை, மே 7 காலை 6 மணி அளவில் கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடக்க வேண்டும். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இச்சூழலில், இந்த சித்திரைப் பெருந்திருவிழா நடக்குமா என்ற கவலை பக்தர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இத்திருவிழா எப்படியும் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுதல்களும் பக்தர்களிடம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சித்திரைத்திருவிழாவை கடும் கட்டுப்பாட்டுடன் நடத்தி முடிக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்.23ம் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சப்பர முகூர்த்தம் எனும் கொட்டகை முகூர்த்தம், ஊரடங்கு உத்தரவால் நடத்த வாய்ப்பில்லை. எனினும் பக்தர்கள் உரிய விரதமிருந்து, திருவிழாவை எதிர்நோக்கியுள்ளனர். மீனாட்சி கோயில் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன், அழகர்கோயில் விழாவின் தொடர்ச்சியான நிகழ்வுகளும் நடத்தப்படும். கோயில்களுக்குள்ளேயே, மிகக்குறைந்த ஆட்களைக் கொண்டு திருவிழாவை நடத்தவும், ஊரடங்கிற்கு பிறகும் சமூக இடைவெளி பேணும்விதமாக பக்தர்களை ஒருங்கிணைத்து, அதிக கூட்டம் சேராதவாறு திருவிழாவை முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம், அறநிலையத்துறைக்கு கொடுக்கும் உத்தரவின் பெயரில், இத்திருவிழா நிகழ்ச்சிகளை கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும். எனினும், திருவிழாவை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மீனாட்சி கோயில், அழகர்கோயில் நிர்வாகங்கள் செய்து வருகின்றன’’ என்றார். திருமலை மன்னர் காலம் தொட்டு எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், சித்திரை திருவிழா தடைபட்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை. எனவே, இந்த ஆண்டும், சில கட்டுப்பாடுகளுடனாவது இந்த பெருவிழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: