Rapid Test Kit வர தாமதம்; கொரோனாவை கண்டறிய 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு வழங்கிய டாடா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி நன்றி

சென்னை: கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பிசிஆர் கருவிகளை வழங்கியதற்காக டாடா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  81 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய தமிழகம் முழுவதும் 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 19 இடங்களில் கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது.  இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை  அளிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே, கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

தற்போது அவசர தேவை என்பதால் டெண்டர் விட்டு வாங்க காலதாமதம் ஆகும் என்பதால், அவசர பணிக்கு எனக்கூறி சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 ஆயிரம் கிட் தமிழகம் வருவதாக  கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த கருவிகளை மத்திய அரசே எடுத்துக் கொண்டது. அவற்றை எல்லா மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாடா நிறுவனம் சார்பில், தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான இந்த பரிசோதனை கருவிகள் வழங்கியதற்காக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: